காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அல்லாபாத் ஏரிக்கரையில், அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குவியலாக கிடக்கும் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை.
இந்நிலையில், ஏரிக்கரையில் குவியலாக கிடந்த குப்பைக்கு மர்ம நபர்கள் கடந்த வாரம் தீ வைத்தனர்.
கொழுந்து விட்டு எரிந்த தீயால், சாலையில் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், அல்லாபாத் ஏரிக்கரை சாலையில் சென்ற பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுபோல, சமூக விரோதிகள் அடிக்கடி குப்பையை எரிப்பதால், காற்று மாசடைவதோடு, அப்பகுதியில் குடியிருக்குபோருக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது.
எனவே, அல்லாபாத் ஏரிக்கரையில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ஏரிக்கரையில் குவியலாக இருந்த குப்பையை அகற்றிஉள்ளனர்.