நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிலும், 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த, பிரபல நடிகை சச்சு: இப்போது எனக்கு 74 வயது. 'இந்த வயதிலும் எப்படி, 'ஆக்டீவா' இருக்கீங்க'ன்னு, நேரில் பார்ப்பவர்கள் கேட்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை.
மனதில் எந்த அழுத்தத்தையும் ஏத்திக்க மாட்டேன். எல்லா வயதிலும், ஏதோ ஒரு விஷயத்தில், எல்லாருக்கும் அப்பப்ப மன அழுத்தம் வரத்தான் செய்யும்.
அப்படி வரும் போது, வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்துவேன்; எப்போதும், மனதை ஆக்டீவாக வைத்துக் கொள்வேன்.
'இன்றைக்கு 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்; நாளைக்கு எதுவும் சம்பாதிக்க முடியாமல் போகலாம்.
இப்போதைய தேவைக்கு எது அவசியமோ, அதற்கு மட்டும் செலவு செய்; மீதியை எடுத்து வை' என்று எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க; அதை உணர்ந்து செலவு செய்வேன்.
மூத்த குடிமகளாகி விட்டாலும், எனக்கு தேவையான எதையும் தவிர்ப்பது இல்லை. நன்றாக, 'டிரஸ்' பண்ணிப்பேன்; வெளியிடங்களுக்கு போவேன்; வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன்.
ஒரு விஷயம் சலிப்பை தந்தால், அடுத்த விஷயத்தை கவனிப்பேன். 'டிவி' மற்றும் 'யு டியூப்' பார்ப்பேன். முக்கியமாக, அன்றிலிருந்து இன்று வரை, தொடர்பில் இருக்கும் சக நடிகையருடன் பேசுவேன்.
திடீர்ன்னு ஒரு, 'கெட் டு கெதர்'க்கு ஏற்பாடு செய்வேன். இப்படிபட்ட செயல்கள், வயதை பற்றி நினைக்க வைப்பதில்லை.
மறைந்த நடிகர் நம்பியார், 'மனதை என்றைக்கும், 16 ஆக வைத்துக் கொள்; உடம்பை, மனதுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்' என்று அடிக்கடி சொல்வார்; அதை இன்றைக்கும் கடைப்பிடிக்கிறேன்.
எந்த வயதிலும், நமக்கான வாழ்க்கையை நாம் வாழலாம். காலையில் எழுந்ததும், பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, செல்லப் பிராணியோட விளையாடுவதுன்னு முடிந்ததை செய்வேன்.
ரசிக்க வேண்டிய விஷயங்களை ரசிப்பேன்; பாராட்ட வேண்டிய விஷயங்களை, மனம் திறந்து பாராட்டுவேன்.
இன்றைய சூழ்நிலையில், பல பெற்றோர் தனிமையை விரும்புகின்றனர். உங்களுக்கு நேரமிருந்தால், அவர்களை சந்தியுங்கள்.
முடிந்தால், அவர்களை வெளியே கூட்டிட்டு போய் சந்தோஷப்படுத்துங்க. அவங்களுக்கு மட்டுமல்ல... உங்களையும் இந்த சந்திப்புகள் சந்தோஷப்படுத்தும்.