சென்னை வி.எல்.சி.சி., நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை, முதலீட்டு நிறுவனமான கார்லைல் வாங்குகிறது.
வி.எல்.சி.சி., நிறுவனம், சரும பராமரிப்பு தயாரிப்புகளை விற்பனை செய்வதுடன், அழகு மற்றும் ஆரோக்கிய துறையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் வணிக வளர்ச்சியை விரிவுபடுத்த உதவுவதற்காக, அதன் பெரும்பான்மையான பங்குகளை, உலக முதலீட்டு நிறுவனமான கார்லைல் வாங்குகிறது.
இதுகுறித்து, வி.எல்.சி.சி., நிறுவனர் வந்தனா லுத்ரா கூறியதாவது:
நாங்கள் செயல்படும் நாடுகளில், வேகமாக வளர்ந்து வரும் சரும பராமரிப்பு, ஒப்பனை, ஆரோக்கிய சந்தையில் பெரிய பங்கை கைப்பற்ற, வி.எல்.சி.சி., சிறந்த நிலையில் உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல, கார்லைல் உடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரும பராமரிப்பு, அழகு மற்றும் ஆரோக்கியத்தை அணுகக்கூடிய வகையில் வாழ்க்கையை மாற்றும் எங்கள் பணி, தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்லைல் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனரும், இணைத் தலைவருமான அமித்ஜெயின் கூறியதாவது:
நம்பிக்கையான இந்திய பிராண்டான வி.எல்.சி.சி., விரிவாக்கத்தில் முதலீடு செய்வதிலும், ஆதரவு அளிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா முழுதும் 'டிஜிட்டல்', இணையதள வணிகம், சிறு 'கிளினிக்'குகளை அதிகரித்தல் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் வாயிலாக, வளர்ச்சியை விரிவுபடுத்துவதில் வி.எல்.சி.சி.,க்கு உதவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.