திருப்போரூர்:சென்னை, வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தை சேர்ந்த தம்பதி விநாயகம் - -உஷாராணி. விநாயகம் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வயதான தம்பதியினர் இருவரும், கடந்த 7ம் தேதி, சபரிமலைக்கு செல்வதற்காக, வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து கிராமமான பொன்மாரில் வசிக்கும் தனது மகளிடம் வீட்டு சாவியைக் கொடுத்து, வீட்டை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், 8ம் தேதி, பொன்மாரில் உள்ள அவரது மகள் மற்றும் மருமகன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த இருவரும், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த கதவு திறக்கப்பட்டு, உள்ளே இருந்த 35 சவரன் தங்க நகை, சில்வர் பாத்திரம், விளக்குகள் மற்றும் 15,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் காணாமல் போனது தெரிய வந்தது.
இதுகுறித்து, தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.