விழுப்புரம், : வெள்ளரிக்காய் வாங்கி 2 லட்சம் ரூபாய் ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பத்தை சேர்ந்தவர் அசோக், 30; இவர், பிடாகம் அத்தியூரில் உள்ள தனது மாமியார் பழனி மனைவி மங்கவரத்தாள் என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளரிக்காய் பயிர் செய்திருந்தார்.
இந்த வெள்ளரிக்காயை கண்டாச்சிபுரம் தாலுகா, மழவந்தாங்கலை சேர்ந்த பிரபு, 37; என்பவரிடம் 4 லட்சம் ரூபாய்க்கு அசோக் விற்பனை செய்தார். இதில், வெள்ளரி விதை, உரம், மருந்து ஆகியவை பிரபுவிடம் 2 லட்சம் ரூபாய்க்கு அசோக் வாங்கியுள்ளார். இந்த பணம் போக, மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை பிரபு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில், பிரபு மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.