மதுரை:''தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரான கட்சி பா.ஜ., என்பது போன்ற மாயையை, தி.மு.க., உருவாக்கி வருகிறது; அதை நாம் தடுக்க வேண்டும். பா.ஜ., மக்களுக்கான கட்சி என்பதை அனைத்து தரப்பினரிடமும் எடுத்து செல்லுங்கள்,'' என, மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
மதுரையில் பா.ஜ., மாநில நிர்வாகிகள், 66 மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அண்ணாமலை பேசியதாவது:
'கவர்னர் தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதிரானவர்' என, தி.மு.க., தொடர்ந்து பிரசாரம் செய்கிறது. தமிழை மையமாக வைத்து பிரசாரம் செய்து, 2019ல் எம்.பி., பதவிகளை பெற்றனர். அதே 'பார்முலா'வை சட்டசபை தேர்தலிலும் பின்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
தற்போது, 2024 லோக்சபா தேர்தலை கணக்கிட்டு, தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரான கட்சி பா.ஜ., என்பது போன்ற மாயையை தி.மு.க., உருவாக்கி வருகிறது; அதை நாம் தடுக்க வேண்டும்.
மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து தான், நான் ஊடகங்களில் பேசி வருகிறேன். 2019, 2021 தேர்தலில் 3.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம்.
அதற்கான காரணத்தை ஆராய்ந்து செயல்பட வேண்டும். பா.ஜ.,வின் சாதனை மற்றும் 'ஹிந்துத்துவா' பற்றி பேசுவதை காட்டிலும் செயலில் காட்ட வேண்டும்; அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
செலவை குறைப்போம்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை சந்தித்து பேச வேண்டும். பிரமாண்டமாக கூட்டம் போட்டோம் என சொல்வதை விட, கலந்துரையாடல்களை பல்வேறு துறையினருடன் தொடர்ந்து நடத்துங்கள்.
லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் நிகழ்ச்சிகள் வேண்டாம். தேர்தலுக்காக இப்போதே திட்டமிடுங்கள்; அட்டவணை போட்டு செயல்படுங்கள்.
கட்சியில் உங்களுக்கு கீழ் உள்ளவர்களை அரவணைத்துச் செல்லுங்கள்; புதியவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
பட்டியல் இனத்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு பரிமாறுங்கள். கிராமங்களில் தங்கி களப்பணி ஆற்றுங்கள். மக்களுக்கான கட்சி பா.ஜ., என்பதை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, துணைத் தலைவர் துரைசாமி, பொதுச் செயலர்கள் ராம. சீனிவாசன், துணைத்தலைவர்கள் நயினார் நாகேந்திரன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.