பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மொழி மீது பெரும் காதல் உள்ளது. இது, அவருடைய பல பேச்சுகளில் வெளிப்பட்டுள்ளது. வரும் பிப்., ௧ல் தாக்கல் செய்யப்பட உள்ள ௨௦௨௩ம்ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலும், தமிழ் மணம் பெருமளவில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு கூட்டங்களிலும் தமிழ் மொழியே உரக்க ஒலித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள மத்திய பா.ஜ., அரசின் கடைசி முழு நிதி நிலை அறிக்கை, பிப்., ௧ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
லோக்சபாவுக்கு, ௨௦௨௪ மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. எனவே, அந்த ஆண்டு பிப்., ௧ம் தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
வருமான வரிச் சலுகை
இந்த அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதாலும், கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருவதாலும், லோக்சபா தேர்தல் மற்றும் ௨௦௨௩ல் ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதாலும், ௨௦௨௩ - ௨௦௨௪ மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு துறைகளும் தங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்துள்ளன. நடுத்தர வருவாய் மக்களும், வருமான வரிச் சலுகை உட்பட பல சலுகைகளை எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இது, ஐந்தாவது பட்ஜெட்டாகும்.
இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆறு முறை பட்ஜெட் தொடர்பாக நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மொழி மீது பெரும் காதல் உள்ளது. நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பலமுறை தமிழ் மொழி சிறப்பு குறித்தும், தமிழ் மொழி வாசகங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்துள்ள நான்கு பட்ஜெட்களிலும் தமிழ் வாசகங்களை, செய்யுள்களை, பாடல்களை பலமுறை பயன்படுத்தியுள்ளார். வரும் பட்ஜெட்டில் இந்த தமிழ் மணம் இன்னும் கூடுதலாக வீசும் என கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட் தயாரிப்பில் நிர்மலா சீதாராமனுடன், தமிழரான மத்திய நிதித் துறை செயலர் டி.வி.சோமநாதன் ஈடுபட்டுள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கான கூடுதல் செயலர் ஆஷிஷ் வச்சானி, தமிழில் சரளமாக பேசக் கூடியவர்.
புதிய திட்டங்கள்
இந்த மூவரும் தான், பிரதமர் மோடியின் கனவு பட்ஜெட்டை தயாரித்து வருகின்றனர். பட்ஜெட் உரையில் புறநானுாறு, அகநானுாறு, சிலப்பதிகாரத்தில் இருந்து பல முக்கிய பாடல்கள் இடம்பெற உள்ளன. இதைத் தவிர திருக்குறளும், பாரதியாரின் கவிதைகளும் நிச்சயம் இடம்பெறும்.
பட்ஜெட்டில் மட்டும் தமிழ் மணக்கவில்லை. பட்ஜெட் தயாரிப்பிலும் தமிழ் உரத்து ஒலிக்கிறது. பட்ஜெட் தயாரிப்பின்போது, இந்த மூவரும் தமிழிலேயே உரையாடுகின்றனர்.
இந்த பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வரிச் சலுகைகளுடன், பெண்களுக்கென பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் இரண்டாவது சொத்து, பெண்ணின் பெயரில் வாங்கினால் கூடுதல் சலுகைகள் அளிப்பது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் தமிழ் மணம் வீசுவதுடன், தமிழகத்துக்கென பல புதிய திட்டங்களையும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பு முதல், அது தாக்கல் செய்யப்படும் வரை தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க, உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நிதி அமைச்சகம் அமைந்துள்ள 'நார்த் பிளாக்' பகுதியில் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரியாக இருந்தாலும் முழு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு என, தனியாக சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பட்ஜெட் தயாரிப்பில் உள்ள பகுதியில், 'இன்டர்நெட்' சேவை முடக்கப்பட்டுள்ளது. 'புளூ டூத், பென்டிரைவ்' போன்ற சாதனங்களுக்கு அனுமதி கிடையாது.இங்கு, ஐ.பி., எனப்படும் மத்திய புலனாய்வு அதிகாரிகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தபின், பட்ஜெட் ஆவணங்கள், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டன.
எம்.பி.,க்களுக்கும் டிஜிட்டல் வாயிலாக பட்ஜெட் வழங்கப்படுகிறது. இதனால், 1,000த்துக்கும் குறைவாகவே பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுகின்றன.பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி துவங்குவதை குறிக்கும் வகையில், வரும் ௨௨ம் தேதி, 'அல்வா கிளறும்' நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதன் பின், பட்ஜெட் அச்சிடும் பணியில் உள்ளவர்கள், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அச்சகத்தில் இருந்து வெளியே செல்ல முடியாது; யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது.பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., ௧ காலை ௧௧:௦௦ மணிக்கு பார்லிமென்டில் தாக்கல் செய்கிறார். அதனால், அச்சிடப்படும் பட்ஜெட் ஆவணங்கள், அன்று காலை ௯:௪௫ மணிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அச்சகத்தில் இருந்து பார்லிமென்ட் எடுத்துச் செல்லப்படும்.
- புதுடில்லி நிருபர் -