ஆரணி:ஆரணி அருகே, விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் நேற்று 'ஜப்தி' செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், அணியாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத், 27. கடந்த, 2014ல், திருவண்ணாமலை - வேலுார் சாலையில், அரசு பஸ் மோதியதில், அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.
விபத்தில் காயமடைந்த சம்பத் இழப்பீடு கோரி, ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2021ல், 7.54 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க, திருவண்ணாமலை மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், போக்கு வரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால், மேல் முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க, கடந்த மாதம் உத்தரவிட்டது. எனினும், வழங்கப்படவில்லை.
இதையடுத்து, நேற்று காலை, ஆரணி பழைய 'பஸ் ஸ்டாண்டில்' நிறுத்தியிருந்த அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர் துரை தலைமையிலான ஊழியர்கள் 'ஜப்தி' செய்தனர்.
Advertisement