திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ. 15 லட்சத்திற்கும் மேலாக இழந்த சிவன்ராஜ் 34, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர். மகன் சிவன்ராஜ், பட்டதாரி வாலிபர். டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வந்தார்.
சிவன்ராஜ் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காண்பித்தார். ஆரம்பத்தில் அதில் பணம் வரவு வந்தது. பின்னர் லட்சக்கணக்கில் இழந்தார். ஒரே மகன் கேட்கிறாரே என தந்தை பாஸ்கர் நிலங்களை விற்று ரூ. 15 லட்சம் வரை தந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு நிலத்தை விற்க ரூ. 5 லட்சத்துக்கு விலை பேசி ரூ 1.5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளார். அதில் ரூ. ஒரு லட்சத்தை மகனுக்கு கொடுத்துள்ளார். அதனையும் சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் சகோதரியிடம் போனில் பேசிய சிவன்ராஜ் பின்னர் அங்கு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவன்ராஜின் தந்தை பாஸ்கர் கூறுகையில், ''ஒரே மகன் என்பதால் செல்லம் கொடுத்தேன். சொத்துக்களை விற்று பல லட்சம் ரூபாய் கொடுத்தேன். அவன் சூதாட்டத்தில் உயிரையும் இழப்பான் என எதிர்பார்க்கவில்லை ''என்றார். பணகுடி போலீசார் விசாரித்தனர்.