தேவகோட்டை:தேவகோட்டை அருகேஇருபெண்களைகொலை செய்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையைச் சேர்ந்த செல்லையா மனைவி கனகம் 65. இளைய மகள் வேலுமதி35. கணவர் குமார் வெளிநாட்டில் இருப்பதால் வேலுமதி தனது மகன் மூவரசனுடன் 12, தாயார் கனகம் வீட்டில் வசித்து வந்தார். வேலுமதியின் மூத்த சகோதரி மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி தாயார் வீட்டில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு மர்மகும்பல் வீட்டிற்குள் புகுந்து மூவரையும் அரிவாளால் வெட்டி, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வீட்டைச்சுற்றி மிளகாய் பொடியையும் தூவி சென்றனர்.
காலையில் இறைச்சி வியாபாரி கீழகாவனவயல் பெரியசாமி திருமணத்திற்கு ஆர்டர் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது சிறுவன் மூவரசன் ரத்த காயத்துடனும், வேலுமதி பிணமாகவும், அரிவாள் வெட்டுப்பட்டு கனகம் காயத்துடனும் கிடந்துள்ளனர்.
போலீசுக்கு தகவல் தரப்பட்டது. டி.எஸ்.பி. கணேஷ் குமார், போலீசார் வந்து காயமடைந்த கனகம், மூவரசன் இருவரையும் தேவகோட்டை மருத்துவமனைக்கும், வேலுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை மருத்துவமனைக்கும் அனுப்பினர்.
வீட்டில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு ரூ.19 லட்சம் மதிப்புள்ள 46 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது . மோப்பநாய் சற்று தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றது. அங்கு பாட்டில்கள் கிடந்தன.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனகம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். டி.ஐ.ஜி. துரை கூறுகையில்,கொள்ளையர்களை பிடிக்கஎஸ்.பி.,தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.