போதிய உற்பத்தி நடக்காததால், தமிழகத்தின் பெரும்பாலான ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுடன் இலவச வேட்டி, சேலை வழங்காமல் கைவிரிக்கப்படுவதால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிருப்தியை சமாளிக்க, கூடுதலாக, 3,000 தறிகளைக் கண்டறிந்து, வேட்டி, சேலை உற்பத்தி பணியை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குகிறது. இந்த திட்டத்திற்காக, நடப்பு ஆண்டில் 488 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
மாநில அளவில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 17 ஆயிரத்து 455 தறிகளில், 1.26 கோடி வேட்டிகள்; 21 ஆயிரத்து 389 தறிகளில், 99.56 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்ய, 'ஆர்டர்' வழங்கப்பட்டது. இந்த ஆர்டர், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள தறி ஓட்டுபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும்.
அதன்படி, ஈரோடு சரகத்தில், 61.29 லட்சம் சேலைகள், 69.02 லட்சம் வேட்டி உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், 45 லட்சம் சேலை, 35 லட்சம் வேட்டி உற்பத்தி, டிச., 25ல் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநில அளவில் 80 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், வினியோகம் செய்வதற்காகமாவட்ட வாரியாக வேட்டி, சேலைகள் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேஷன் கடைகளில், 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய், கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் 9ம் தேதி துவக்கி வைத்தார்.
ஆனால், பொங்கல் பரிசு தொகுப்புடன், கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் 1,000 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்படுகிறது; இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை.
இதனால் கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, வேட்டி, சேலை உற்பத்தியை வேகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கைத்தறி துறை கமிஷனர் ராஜேஷ், ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் கைத்தறி துறை உதவி இயக்குனர்களுக்கு, இம்மாதம் 10ம் தேதி அனுப்பிய உத்தரவின் விபரம்:
உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட வேண்டும். இதனால் குறைந்தபட்சம், 3,000 விசைத்தறிகளை உடனே கண்டறிந்து, அவற்றின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து, விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
இலவச வேட்டி, சேலை, 'ஆர்டர்' மிக தாமதமாக வந்தது. அக்டோபரில் பணிகள் துவங்கப்பட்டன. தரமற்ற நுாலால் வேட்டி, சேலை உற்பத்தி தினமும், 30 சதவீதம் குறைந்தது. நுால் அறுந்து போவதால், பல விசைத்தறியாளர்கள் வேட்டி, சேலை ஆர்டர் வேண்டாம் என ஒதுங்கினர்.
வேட்டி, சேலை நெய்து கொடுக்க, எண்ணிக்கை அடிப்படையில் கூலி வழங்கப்படுவதால், நுால் அறுந்து போவதால், பாதி அளவுக்கு கூட துணியை ஓட்ட முடியாமல் தவிர்த்தனர். தற்போது வரை, 65 சதவீத பணிகள் கூட முடியவில்லை.
சில மாவட்டங்களுக்கு மட்டும் வேட்டி, சேலை அனுப்பப்பட்டு உள்ளன. இதனால், பொங்கல் பரிசு தொகுப்புடன், கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக வேட்டி, சேலை வழங்கப்படுகின்றன.
மற்ற பகுதிகளில் அடுத்த, 15 நாட்களுக்கு பின் தான் வேட்டி, சேலை வழங்கும் நிலை உள்ளது. இதனால், 3,000 தறியை கூடுதலாக கண்டறிந்து, வேட்டி, சேலை உற்பத்தி பணியை நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -