சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சபாநாயகர் பேச அனுமதிக்காததை கண்டித்தும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில்கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து பேச அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதி அளித்தார்.
பழனிசாமி எழுந்து, ''தினமும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் தொடர்கிறது. சென்னை விருகம்பாக்கம் தி.மு.க., பொதுக்கூட்டத்தில், பெண் காவலருக்கு, இருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்,'' என்றார்.
சபாநாயகர் மீண்டும் குறுக்கிட்டு,''அந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். நடவடிக்கை எடுக்காத சம்பவமாக இருந்தால் கூறலாம். நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து பேசக்கூடாது,'' என்றார்.
இதனால் கோபமடைந்த பழனிசாமி, ''நீங்களே பேசிக் கொண்டிருந்தால் எப்படி; எதையும் பேச விட மாட்டேன் என்கிறீர்கள்,'' என்றார்.
முதல்வர் எழுந்து, ''அவரை பேச விடுங்கள். அப்போது தான் அவர்கள் ஆட்சியில் நடந்ததைக் கூற முடியும்,'' என்றார்.
அதை ஏற்று சபாநாயகர் பேசும்படி கூற, பழனிசாமி எழுந்து, ''ஆளும் கட்சியில் இருந்து சிக்னல் வந்தால் தான் பேச அனுமதிக்கிறீர்கள். இது வேதனை அளிக்கிறது,'' என்றார்.
உடனே முதல்வர் குறுக்கிட்டு, ''சபாநாயகர் மீது இப்படி குற்றம் சாட்டுவது முறையல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
''நேரமில்லா நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது, முதல்வராக இருந்தவருக்கு தெரியும். அந்த முறையை பின்பற்றினால் அனுமதியுங்கள். எனக்கும் பேச அனுமதி கொடுங்கள்,'' என்றார்.
தொடர்ந்து பேசிய பழனிசாமி, ''சென்னையில் தி.மு.க., பொதுக்கூட்டத்தில், பெண் காவலருக்கு, தி.மு.க.,வினர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கண்டனத்துக்கு உரியது.
''பெண் காவலர் புகார் மீதே நடவடிக்கை எடுக்காத நிலையில், சாதாரண பெண்களின் புகார் மீது எப்படி நடவடிக்கை எடுப்பர் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
''சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை கண்டித்தும், சபாநாயகர் பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம்,'' என்றார்.
அதற்கு பதில் அளிக்க முதல்வர் எழுந்தபோது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சபையில் அமர்ந்திருந்தனர்.