''புதுக்கோட்டை மாவட்டத்தில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவுகளை கலந்த சம்பவத்தில், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்,'' என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கலந்த சம்பவத்தில், இன்னமும் யாரும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக, நேற்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் மீது மார்க்சிஸ்ட் - சின்னதுரை, வி.சி., கட்சி - எஸ்.எஸ்.பாலாஜி, கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன், ம.தி.மு.க., - சதன் திருமலை குமார், பா.ம.க., - ஜி.கே.மணி, காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை, அ.தி.மு.க., - விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினர்.
முதல்வர் அளித்த பதில்:
ஜாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை இன்னும் இருப்பதை, வேங்கைவயல் கிராமத்தில் நடந்த நிகழ்வு காட்டுகிறது.
அக்கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினேன்.
மருத்துவக் குழுவினர் முகாமிட்டு, நோய் தடுப்பு பணிகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் செய்து வருகின்றனர்.
அங்குள்ள 32 வீடுகளுக்கும், 2 லட்சம் ரூபாய் செலவில், புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, சீரான குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.
புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, 7 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., மேற்பார்வையில், ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
அந்த வகையில், இதுவரை 70 நபர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட, உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் எவ்வளவு தான் பொருளாதாரத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் முன்னோக்கி சென்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள், சமூக வளர்ச்சியில், ஒற்றுமையில் அவ்வப்போது தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன.
இன்னும் சில பகுதிகளில் காணப்படும் ஜாதி, மத வேறுபாடுகளே இதற்கு காரணம். ஜாதி, மதங்களை துாக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள், இன்னும் இருக்கின்றனர்.
இவர்களை எல்லாம் தாண்டி, ஜாதி, இன, மத வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, அனைவரும் சம உரிமை கொண்ட மனிதர்கள் என்ற உணர்வோடும், மனிதநேயத்தோடும் விளங்க வேண்டும்.
இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.