சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தமிழகம் முழுதும் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாளை மறுநாள் போகி பண்டிகை; 15ல் பொங்கல், 16ல் மாட்டுப் பொங்கல், 17ல் காணும் பொங்கல் என, தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கி வேலை செய்வோர், சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர்.
இவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு, இன்று முதல், 14ம் தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இன்று, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும், 2,100 பஸ்களுடன், 651 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
நாளை, 1,856 பஸ்களும்; நாளை மறுநாள் 1,943 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மூன்று நாட்களிலும், 4,449 சிறப்பு பஸ்கள் உட்பட, 10 ஆயிரத்து 632 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மற்ற நகரங்களில் இருந்து, இன்று 1,508; நாளை 2,214; நாளை மறுநாள் 2,461 என, 6,183 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்கான 'டிக்கெட்' முன்பதிவு, www.tnstc.in என்ற இணையதளம்; tnstc official app எனும் 'மொபைல் போன்' செயலியில் மேற்கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகைக்காக, சொந்த ஊர் செல்ல, அரசு பஸ்களில் செல்ல, நேற்று முதல் நாளை வரை, 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும், 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துஉள்ளனர்.