பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சி, 21வது வார்டு குமணன்சாவடியில், ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
பள்ளியின் வளாகத்தை ஒட்டி, அப்பகுதியினர் உணவுக்கழிவு, பிளாஸ்டிக் குப்பையை வீசிச் செல்கின்றனர். இதனால், பள்ளி வளாகம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
மேலும், இங்கு கொட்டப்படும் உணவுக் கழிவுகளால், பள்ளி வளாகத்தில் எலிகள் தொந்தரவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், பள்ளிக்கு வெளியில் அப்பகுதியினர் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். சிலர், பழுதடைந்த வாகனங்களை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் பள்ளிக் குழந்தைகள், செல்ல வழி இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளிக்கு எதிரில் வாகனங்கள் நிறுத்துவதையும், குப்பை கொட்டுவதையும் தடுக்க உரிய நடைவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்கின்றனர்.