குரோம்பேட்டை, :குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மேம்பால அணுகு சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டித்து, பள்ளத்தில் படுத்து முதியோர்கள் போராட்டம் நடத்தினர்.
குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தில், நியூ காலனியை ஒட்டி அணுகு சாலை உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அணுகுசாலையை பயன்படுத்துகின்றனர். லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், அடிக்கடி பள்ளம் தோண்டுவதும், அதை முறையாக மூடாததும் தொடர்கிறது.
இதனால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக சாலை மாறிவிட்டது. இதில் செல்லும் முதியவர்களும், மாணவர்களும் பள்ளத்தில் தவறி விழுந்து அடிபடுகின்றனர்.
இப்பிரச்னை குறித்து, பல முறை புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வராமல், அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால், நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், போக்கு வரத்துக்கு லாயக்கற்றநிலையில் உள்ள சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து, குரோம்பேட்டையை சேர்ந்த மூத்த குடிமக்கள், நேற்று காலை, சாலையில் உள்ள பள்ளத்தில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.