செம்மஞ்சேரி,:உடல் உபாதைகளுக்கு காரணமான, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி துவங்கியது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், எழில்முக நகரில் உள்ள, 11 தெருக்களில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, வீட்டு குடிநீர் இணைப்பு வசதி வழங்கவில்லை. இதனால், ஒவ்வொரு தெருவிலும், 5 பொது குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
கடந்த ஒரு மாதமாக, அதுவும் முறையாக செய்யவில்லை. ஆனால், சிலர் சட்டவிரோதமாக மோட்டார் வைத்து குடிநீரை திருடுகின்றனர்.
இங்கு, குடிநீர் வினியோகம் செய்ய, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதை, சுத்தம் செய்யாமல் குடிநீர் நிரப்பினர். இதனால், பகுதி மக்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும்பணி துவங்கியது.
தொட்டியில் இருந்த ஏணி சேதமடைந்ததால், சவுக்கு மரம் கட்டி, அதில் ஏறிச் சென்று தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மேலும், சட்டவிரோதமாக மோட்டார் வைத்து குடிநீர் திருடும் நபர்கள் மீது, காவல் துறை வழியாக நடவடிக்கை எடுக்க, வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Advertisement