வியாசர்பாடி வியாசர்பாடியில் ரவுடிகள் கும்பல் கடைகள் மற்றும் வாகனங்களை சூறையாடியதோடு, சாலையில் சென்ற பொதுமக்கள் ஆறு பேரை வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை, வியாசர்பாடி, பி.வி.காலனி, 1வது தெரு முதல் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூலக்கடை வரை, நேற்று முன்தினம் நள்ளிரவு, முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த எட்டு பேர் கும்பல், அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இரண்டு கார், தலா 4 டாட்டா ஏசி வாகனங்கள், ஆட்டோகளை அடித்து நொறுக்கினர். மேலும் ஜெராக்ஸ் கடை, இரண்டு மளிகை கடைகளையும் சூறையாடினர்.
அதுமட்டுமல்லாமல், அவ்வழியே வந்த பொதுமக்கள் ஆறு பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த மக்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதை பார்த்த பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.
இச்சம்பவத்தில், வியாசர்பாடி, பி.வி.காலனி, 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்த லோகநாதன், 32, புளியந்தோப்பு, நரசிம்மா நகர், 4வது தெருவைச் சேர்ந்த நவீன், 24, எம்.கே.பி.நகர், 19வது கிழக்கு குறுக்கு தெருவைச் சேர்ந்த கோபி, 48, கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர், 7வது பிளாக்கைச் சேர்ந்த இம்ரான்கான், 32, அவரது மனைவி காயத்ரி, 28, வியாசர்பாடி, சாஸ்திரி நகர், 2வது தெருவைச் சேர்ந்த ஷாம், 23, ஆகியோரை கத்தியால் வெட்டியதில் தலை, தோள்பட்டை, கை, கழுத்தில் வெட்டியதில் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் இம்ரான்கான் என்பவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் இக்கும்பல் அடிக்கடி மது குடிக்க மிரட்டி மாமூல் வாங்கி வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டிற்கு மாமூல் கேட்டுள்ளனர். இம்ரான் கான் தர மறுத்துள்ளார்.
இந்நிலையில், மூலக்கடை உள்ள அத்தோ கடையில் இம்ரான்கானும், அவரது மனைவி காயத்ரியும் நின்றிருந்த போது அங்கு வந்த கும்பல் மாமூல் தரவில்லை எனக்கூறி, இம்ரான்கானை தலை மற்றும் தோள்பட்டையில் வெட்டியது. இதை தடுத்த அவரது மனைவி காயத்ரிக்கும் கையில் வெட்டு விழுந்தது.
இது குறித்து எம்.கே.பி., நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்.கே.பி., நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரவுடிகளான திலீப், அரவிந்த், கலை, வசந்த், கிஷோர், சஞ்சய், ஸ்ரீதர், நவீன் ஆகியோர் போதையில் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவானவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.