சென்னை:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று ஓய்வு பெற்றார். இவரது பதவி காலத்தில், 69 ஆயிரம் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2013ல் பி.என்.பிரகாஷ் நியமிக்கப்பட்டார். ஒன்பதரை ஆண்டு காலம் நீதிபதியாக பதவி வகித்த பிரகாஷ், நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு, உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் பேசும்போது, ''ஒன்பதரை ஆண்டு பதவி காலத்தில், 69 ஆயிரம் வழக்குகளில் நீதிபதி பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்,'' என்றார்.
நன்றி தெரிவித்து, நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசியதாவது:
வழக்கறிஞர்கள் திறமையானவர்கள். சட்டத்தை மதித்து நடப்பவர்கள். 2009 பிப்., 19ல், உயர் நீதிமன்றத்தில் போலீசார் நடத்திய தடியடி சம்பவம், மிகவும் மோசமானது.
நான் அளித்த தீர்ப்புகளால், சமூகத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டது; எத்தனை பேர் பயன் அடைந்தனர் என்பதை தான் பார்க்க வேண்டும்.
ஓய்வுக்கு பின், கைதிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பது; ஏழை மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வு தடைகளை முறியடிக்க பயிற்றுவிப்பது என முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். நீதிபதி பிரகாஷ் ஓய்வு பெற்றதன் வாயிலாக, உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை, 52 ஆக குறைந்துள்ளது; 23 காலியிடங்கள் உள்ளன.