அயனாவரம்,
தனியார் திரையரங்கில், 500 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்று, படங்களை வெளியிடப்படாததால், ரசிகர்கள் திரையரங்கத்தை முற்றுகையிட்டனர்.
நடிகர் அஜித் நடித்த துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள், நேற்று தமிழகம் முழுதும் வெளியாகின.
சென்னை அயனாவரத்தில் உள்ள மிகவும் பழமையான பிரபல கோபி கிருஷ்ணா தியேட்டரில், வழக்கம் போல ஆன்லைனிலும் நேரடியாகவும், இந்த படங்களுக்காக டிக்கெட் விற்பனை நடந்துள்ளது.
தியேட்டரில் 200 ரூபாய் வீதம் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. இதை சிலர் வாங்கி, 500 ரூபாய்க்கு மேலும் விற்றுள்ளனர். நேற்று நள்ளிரவு தியேட்டரில் கூடிய ரசிகர்கள், 100க்கும் மேற்பட்டோர், தங்களது விருப்ப நடிகரின் 'கட் அவுட்'களை வைத்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தியேட்டர் நிர்வாகத்திற்கு இரு படங்களையும் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த தியேட்டரில் வெளியிட இருந்த இரண்டு படங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், நள்ளிரவு குவிந்த இரு நடிகர்களின் ரசிகர்களும், ஒன்றிணைந்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களின் டிக்கெட் தொகையை தியேட்டர் நிர்வாகம் திருப்பி வழங்கியது.
காலை 11:45 மணிக்கு வெளியாக இருந்த படங்களும் வெளியாகாததால், ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அயனாவரம் போலீசார், ரசிகர்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர்.
விசாரணையில், தியேட்டர் நிர்வாகம் சார்பில், திரைப்பட வினியோகஸ்தர்களிடம் குறிப்பிட்ட பணத்தை செலுத்தி படங்களை வாங்க முடியாததால், காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தெரிந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த தியேட்டருக்கு கேளிக்கை வரி பாக்கி இருந்ததால், டிச., 27ம் தேதி, தியேட்டரின் 'புரொஜக்டர்' அறைக்கு மாநகராட்சி 'சீல்' வைத்தது. பின், நேற்று முன்தினம் மாலை, நிலுவை தொகையை தியேட்டர் நிர்வாகம் செலுத்தியதாகவும், அதனால் அறையின் 'சீல்' அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.