கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலத்தில் 9 மாதங்களில், 232 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்றதுடன், 77 சாலைகள் சீர் செய்ய, 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் மண்டல குழுக் கூட்டம், நேற்று முன் தினம் மாலை, மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.
இதில், செயற்பொறியாளர்கள் பெரியசாமி, இனியன் என, பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''கோடம்பாக்கம் மண்டலத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்று 9 மாதங்களில், மழை நீர் வடிகால், சாலை என, 232 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்றுள்ளன.
தற்போது, 11 கோடி ரூபாய் மதிப்பில், 77 சாலைகளை சீரமைக்க, 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும், 254 சாலைகளை சீர் செய்ய, 28 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம்,'' என்றார்.
138வது வார்டு கவுன்சிலர் கண்ணன் பேசுகையில், ''தங்கள் வார்டில் உள்ள கவுன்சிலர் 'மொபைல்' எண் பல மக்களுக்கு தெரியவில்லை.
எனவே வார்டுகளில் உள்ள தெரு பெயர் பலகைகளில் கவுன்சிலர் மொபைல் எண்ணை எழுத வேண்டும்,'' என்றார்.
133வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை பேசுகையில்,''தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள விளையாட்டுத்திடலில், பொங்கல் விழா நடைபெற உள்ளதால், தி.நகரை சுற்றி உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்,'' என்றார்.