சென்னை:இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், அரசு கல்லுாரிகளின் அனைத்து இடங்களும் நிரம்பின.
தமிழகத்தில், சென்னை அரும்பாக்கம், செங்கப்பட்டு ஆகிய இடங்களில், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 160 இடங்கள் உள்ளன. மேலும், 17 தனியார் கல்லுாரிகளில், 1,550 இடங்கள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட படிப்புக்கு, 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலில், 1,766 பேர் இடம் பெற்றனர்.
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையும், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் நடந்தது.
இரண்டாம் நாளான நேற்று, அரும்பாக்கம் யோகா மருத்துவ கல்லுாரியிலும், செங்கல்பட்டு கல்லுாரியிலும் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகிறது.