சென்னை:அயல்நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களை ஒருங்கிணைக்கவும், அயல் நாடுகளில் உள்ள சாதனை தமிழர்களை பெருமைப்படுத்தவும், தமிழக அரசு சார்பில், சென்னையில் அயலகத் தமிழர் தின விழா, நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவுக்கு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமை வகித்தார். எம்.பி., கனிமொழி விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:
தமிழக அரசின், தகவல் தொழில்நுட்பத் துறை கீழ், 'தமிழ் இணைய கல்விக் கழகம்' வாயிலாக, பல்வேறு நாடுகளில், தமிழ் கற்றல், கற்பித்தல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 'ஆன்லைன்' தமிழ் கல்வி வழங்கப்படுகிறது.
எந்த நாட்டில் இருந்தாலும், தமிழை தகவல் மொழியாக கற்கவும், தமிழின் தொன்மை, இலக்கியம் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும், இரண்டு விதமான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளோம்.
வளமான இலக்கியங்களைக் கொண்ட தமிழ் மொழி அழிந்து விடக்கூடாது. தமிழ் இணைய கல்விக்கழகம் வரும் காலங்களில், தமிழின் பெருமைகளை, உலகம் எங்கும் எடுத்து செல்லும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது.
இவற்றில், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எம்.பி.,க்கள், பல்வேறு துறைச் செயலர்கள், 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சங்க தலைவர்கள், 500க்கும் அதிகமான அயல்நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழ் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று காலை நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, அயலகத் தமிழர்களுக்கான புதிய நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.