தட்சிண கன்னடா, மங்களூரில் கஞ்சா கடத்தி, விற்பனை செய்ததாக மூன்று டாக்டர்கள், நான்கு மருத்துவ மாணவியர் மற்றும் இரண்டு மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் அடக்கம்.
இது பற்றி மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று கூறியதாவது:
கடந்த 8ம் தேதி, மங்களூரு விடுதியில் தங்கியிருந்த நீல் கிஷோர்லால் ராம்ஜி, 38, என்ற கஞ்சா வியாபாரியை கைது செய்தோம். ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த இவர், என்.ஆர்.ஐ., 'கோட்டா'வில் இங்கு பல் மருத்துவம் படிக்க வந்தார்.
இவர், மருத்துவக் கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் டாக்டர்கள் உதவியுடன் கஞ்சா கடத்தி விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இவர் தந்த தகவலின் அடிப்படையில், மருத்துவ மாணவியரான கேரளாவைச் சேர்ந்த நதியா சிராஜ், 24, ஆந்திராவின் வர்ஷினி பிரதி, 26, சண்டிகரின் ரியா சதா, 22, புனேயின் ஹீரா பாசின், 23 ஆகிய நான்கு மாணவியர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களான பஞ்சாபின் பானு தாஹியா, 27, மஹாராஷ்டிராவின் குஷிதிஜ் குப்தா, 25, மற்றும் டாக்டர்களான கேரளாவின் சமீர், 32, தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமாறன் முத்து, 28, பன்ட்வாலின் முகமது ரகுப் குவாஸ், 34, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா, 78 ஆயிரம் ரூபாய், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.