மதுரை:'குறவர் சமூகத்தினரின் அந்தஸ்தை இழிவுபடுத்தும் வகையிலான ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை விளாங்குடி இரணியன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
கிராம கோவில் விழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
குறவன், குறத்தி குறவன் - குறத்தி ஆட்டத்தில், ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுகின்றன. அந்த ஆட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். போலீசார் அனுமதி அளிக்கக்கூடாது.
குறவன், குறத்தி ஆட்டம் பற்றிய பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மனுவை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.
சில அடித்தட்டு சமூகங்களின் பெயர்கள் மற்றும் ஜாதிய அடையாளம் அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன.
அவர்களின் பூர்வீக நடனம், கலை வடிவங்கள், கலாசாரத்தை பயன்படுத்தி, தவறாக சித்தரிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை சமூகத்தில் நிலவுவதை அனுமதிக்க முடியாது. அனைத்து மக்களும் எல்லா வகையிலும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.
குறவன், குறத்தி ஆட்டம் என்பது கிராமிய கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை வடிவங்களில் ஒன்று. இது, சமீபத்தில் மாற்றமடைந்துள்ளது.
திருவிழாவின் போது இரவு முழுதும் பார்வையாளர்களை ஈர்க்க, ஆபாச மற்றும் பாலியல் நடனங்களை நடத்தத் துவங்கி விட்டனர்.
குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் குறவன் குறத்தி ஆட்ட கலை வடிவம் இன்றும் நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.
இத்தகைய தவறான சித்தரிப்பு, தவறான பயன்பாடு அச்சமூகத்தின் உணர்வை புண்படுத்தும்.
எனவே, குறவன்,- குறத்தி என்ற பெயர்களை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதை தடை செய்ய, இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறது.
*ஜாதி அல்லது பழங்குடியினர் பெயர்களை பயன்படுத்தி, அவர்களை அவமதிக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்
*குறவர் சமூகத்தினரின் சமூக அந்தஸ்தை இழிவுபடுத்தும் வகை கலாசார நிகழ்ச்சி அல்லது ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கூடாது
*அந்த சமூகம் மீதான அவதுாறு நடன வீடியோ குறித்து ஆதாரங்களுடன் மக்கள் புகார் செய்ய, 'சைபர் கிரைம்' துறையால் தனி இணையதளத்தை துவக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரி சரிபார்த்து அந்த வீடியோவை நீக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.