தேவகோட்டை:தேவகோட்டை அருகே இரண்டு பெண்களை கொலை செய்து 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையைச் சேர்ந்த செல்லையா மனைவி கனகம், 65. இவர்களின் இளைய மகள் வேலுமதி, 35.
கணவர் குமார் வெளிநாட்டில் இருப்பதால், தன் மகன் மூவரசன், 12, தாய் கனகம் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார்.
வேலுமதியின் மூத்த சகோதரி மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி, தாய் கனகம் வீட்டில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், மூவரையும் அரிவாளால் வெட்டி, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வீட்டைச்சுற்றி மிளகாய் பொடியையும் துாவிச் சென்றனர்.
காலையில் அந்த வீட்டுக்கு வந்தவர், சிறுவன் மூவரசன் ரத்த காயத்துடனும், மகள் வேலுமதி பிணமாகவும், தாய் கனகம் படுகாயத்துடனும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு 19 லட்சம் மதிப்புள்ள 46 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனகம் இறந்தார். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.