துாத்துக்குடி:''துாத்துக்குடி- - கொழும்பு இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை இரண்டு மாதத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து, டிச.22ல் கிளம்பிய எம்.எஸ்.அமிரா சொகுசு கப்பல், 125 நாட்கள், 25 நாடுகளுக்கு செல்கிறது. 386 பணியாளர்கள் மற்றும் 700 பயணியர் பயணிக்கின்றனர்.
டிச.28ல், கேரள மாநிலம் கொச்சி வந்த கப்பல், நேற்று காலை துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தது.
வெளிநாட்டு பயணியருக்காக, தமிழர்கள் கலாச்சாரப் படி மங்கள வாத்தியம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் போன்றவற்றுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் கதீட்ரல் சர்ச், நெல்லையப்பர் கோவில்; துாத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்திற்கும், சுற்றுலா பயணியர் சென்றனர். நேற்று மாலை இந்த கப்பல், இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் நோக்கி கிளம்பியது.
முன்னதாக பயணியரை வரவேற்ற, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கூறுகையில், ''துாத்துக்குடி துறைமுகத்தில் பயணியர் கப்பல் நிறுத்த தனியாக ஒரு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி- - கொழும்பு இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை இரண்டு மாதத்தில் மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன,'' என்றார்.