நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே, பொங்கல் சீர் வரிசை எடுத்து சென்றவர்களின் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலியாயினர்.
நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்; திருநெல்வேலி மார்க்கெட்டில் பணிபுரிகிறார். இவரின் மனைவி சுபா. இவர்களது மகள் உமாவை, சுசீந்திரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
உமா தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், பொங்கல் சீர்வரிசையை அவரது கணவர் வீட்டில் கொடுக்க முடிவு செய்து, பாலசுப்பிரமணியம் -சுபா தம்பதி, தங்கள் உறவினர்களுடன் காரில் சுசீந்திரம் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
பூதப்பாண்டி - தாழக்குடி ரோட்டில் சென்ற போது, டிரைவர் சிவசங்கரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணித்த உறவினர்களான உலகம்மாள், 65, உமா, 50, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் எட்டு பேர் படுகாயமடைந்தனர். பூதப்பாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.