ஓமலுார்:சேலம் - தர்மபுரி தேசிய நெஞ்சாலையில், இரு கார்கள் மோதிக் கொண்டதில், ஒரு கார் எரிந்து கருகியது. அதில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஏழு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த எலத்துாரில், நேற்று காலை 11:00 மணிக்கு, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், 'பார்ச்சூனர்' கார் வந்தது.
அப்போது கேரளா, ஆலப்புழாவிலிருந்து, கர்நாடகா நோக்கி வந்த, 'ஸ்கோடா' கார், பார்ச்சூனர் கார் மீது மோதியது.
தொடர்ந்து சாலை நடுவே உள்ள தடுப்பில், ஸ்கோடா கார் மோதி தீப்பிடித்து எரியத் துவங்கியது.
அதில் வந்த, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வயது முதல் 62, வயது வரையிலான ஆறு பேர் குடும்பத்தினர் காயத்துடன் உயிர் தப்பினர்.
உடன், அவர்கள் சேலம், மாமாங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பார்ச்சூனர் காரில் வந்த, எலத்துாரைச் சேர்ந்த டிரைவர் அரிவின், 23, காயம் அடைந்து, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.