வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ம.கேசவ விநாயகம், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பர்; அதற்கேற்ற வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரின் துவக்க நாளில், கவர்னர் ரவி கோபத்துடன் வெளியேறியது, ஜனநாயகத்தின் அலங்கோலத்தை பிரதிபலித்துள்ளது.
'ரப்பர் ஸ்டாம்ப், ஆட்டுத்தாடி' என, கவர்னரை காலம் காலமாக கிண்டல் செய்து வருபவர்கள், திராவிட செம்மல்கள். அவர்களுக்கு, அரசு தயாரித்துக் கொடுத்த உரையிலிருந்த சர்ச்சைக்குரிய வாசகங்களை வாசிக்காமலும், திடீரென சபையிலிருந்து வெளியேறியும், அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார், கவர்னர் ரவி.
'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது' என, அரசு தரப்பு எழுதிக் கொடுத்த துதியை, அவர் வாசிக்காததால், அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
![]()
|
கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் வியாபாரம், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாநிலத்தில் பெருகியுள்ளது; புதுக்கோட்டை மாவட்டத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை படம் பிடித்துக் காட்டி வருகின்றன.
இந்நிலையில், 'மாநிலம் அமைதியாக இருக்கிறது, அரசு சீராக இயங்குகிறது என்று சொல்ல, அவர் என்ன தி.மு.க., உறுப்பினரா?' என்று அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பும் இந்தக் கேள்விக்கு, தி.மு.க.,வினரால் பதில் சொல்ல முடியுமா?
தமிழக சட்டசபையில், சமீபத்தில் நிகழ்ந்தது, ஒரு ஆட்டுத்தாடியானது அரிவாளாக உருமாறிய சம்பவம்; ரப்பர் ஸ்டாம்பானது சரித்திர கதையாக மாறிய நிகழ்வு!
'தலைமகனே கலங்காதே... தனிமை கண்டு வருந்தாதே... உன் தந்தை தெய்வம் தானடா...' என்ற, அருணாச்சலம் சினிமா பட பாணியில், கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வேதனையுடன் வெளியேறி உள்ளார். அவர் இன்று கண்ட அவமானம்... என்று தரும் வெகுமானம் என, காலம் கணக்கு தர காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.