கொண்டாட்டமும்; திண்டாட்டமும்!
கோல்டன் சிட்டியில் மக்கள் திலகம், நடிகர் திலகம் காலம் தொடங்கி, சூப்பர் ஸ்டார், உலகநாயகன், ஆகியோரை தொடர்ந்து, தற்போது தல, தளபதி ரசிகர்களின் ஆட்டமும், கொண்டாட்டமும், அதன் வேகமும், மோகமும் குறையவோ, தணியவோ இல்லை. கிலோ கணக்கில் கற்பூரம் ஏற்றியும், கட் அவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கியும், வாரிசு, துணிவுக்காக அமர்க்களப்படுத்தினாங்க. ஒரே நாளில் இரு நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆனதை திருவிழா போல கொண்டாடினாங்க, 'ஓகே' தான்.
ஆனா, தாங்கள் வாழும் கோல்டு நகரில் அடிப்படை பிரச்னைகள், அத்தியாவசிய தேவைகள், தொழில் பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதில் ஒரு 10 சதவீத அக்கறையாச்சும் ரசிக யூத்துகளுக்கு வரணுமே. ரசிகர் படைகளே சுகமாக வாழ, வாழும் இடத்தின் மீதும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமேன்னு அரசியல் கட்சிகளின் ஆர்வலர்கள் தேர்தலுக்காகபேசுறாங்க.
உழைப்பவர்களுக்கு தான் சீட்!
பூ கட்சியில பூத் கமிட்டி கூட்டம் நடத்தி வராங்க. கட்சி கூட்டங்களில் தொடர்ந்து யார் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு தான் அசெம்பிளி தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்கும். எடுத்த எடுப்பில் சீட் கொடுங்கள் என்றால், வாரி வழங்குகிற கட்சி நமதல்ல என, தங்கமான நகரில் பார்வையாளராக நியமிக்கப்பட்ட பிரதிநிதி பஞ்ச் வசனம் பேசினாரு.
தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் மத்தியில் அவர் பேசியது, யாரையோ மனதில் வைத்துக்கொண்டு மற்றவர்களை எல்லாம் அடங்கி வேலையை பாருங்கன்னு சொன்னதாக இருந்ததாம்.
காலத்துக்கும் கொடி துாக்கி கோஷம் போட்டு, எதிர் தரப்பினரிடம் சவால் விடுபவர்கள், இருக்கும் இடத்திலேயே இருக்கிறார்களாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அடையாளம் கண்டு கொள்ளாதவர்கள் வெறுப்போடு தான் இருக்காங்க.
ஸ்டேட்டும், சென்ட்ரலும் நமது. ஆனால் வட்டியில்லா 'லோன்' கூட பூக்காரர்களுக்கு கிடைக்கலையே. கை காரர்கள் பெற்ற சலுகைகள் கூட தங்களுக்கு கிடைக்கலயேன்னு பூக்காரர்கள் சிலர் வருந்துறாங்க.
காலில் விழுவதை நிறுத்துங்க!
தற்போதைய அசெம்பிளி மேடம் தவிர, தங்க நகரில் இதுவரை ச.ம.உ.,வாக இருந்தவர்களில் யாருமே காலில் விழும் கலாச்சாரத்தில் இருந்ததில்லை. இவர் மெத்த படித்தவர். மேன்மையான சமூக அக்கறையாளர். தகுதி பாராமல் பலரின் காலில் விழலாமா என்பதே பலரது விமர்சனமாக உள்ளது.
கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இவர் சகல வசதிகளையும் செய்து கொடுத்து, வழியனுப்பி, அவர்களின் காலில் விழலாமா. இது ஏற்புடையதா? எதிலுமே துணிவுமிக்க இவர், சமுதாய சிந்தனை உள்ளவர். இவரின் காலில் விழும் பணிவு, சிறந்த வழிகாட்டுதலாக இருக்குமா.
காலில் விழுவதை மரியாதை நிமித்தமாக, பெரியோரிடம் அவர் ஆசி பெறுகிறாராம். அவ்வாறு அவர் நினைத்தாலும், இவர் தகுதியை தாழ்த்திக் கொள்வதாக பலர் நினைக்கின்றனர். இனியேனும் மண்ணடிமை, பெண்ணடிமை நாட்டில் இருக்க கூடாதென கருதுபவர்கள், காலில் விழுவதை ஒருபோதும் பெருமையாக நினைக்க மாட்டார்கள்.
தாழாதே, மற்றவரை தாழ்த்தாதே என்பது ஜனநாயக நாட்டின் சமத்துவ உரிமை என பேசினால் போதாது. எதிலும் தலை நிமிர்ந்து நிற்க, செயலில் காட்ட, மேடம் காலில் விழுவதை தவிர்க்க வேண்டும் என்று மகளிரும் தெரிவிக்கிறாங்க.
தீராத சர்வே பணி!
பெமலில் பயன்படுத்தாமல் காலியாக வைத்துள்ள நிலத்தை இன்னும் எத்தனை முறைதான் சர்வே செய்வார்களோ. இன்னும் எத்தனை துறைகளின் ஆபீசர்கள் தலை காட்டுவார்களோ. பயன்படுத்தாமல் உள்ள 967 ஏக்கரை மத்திய அரசு, மாநில அரசிடம் ஒப்படைக்க, அதனை வருவாய்த் துறையினரிடம் வழங்க, அதன் பின், தொழில் துறையினரிடம் ஒப்படைப்பதாக ஓராண்டாக சர்வே வேலை நடக்கிறது.
'மாஜி' முதல்வராக இருந்த தொழில் துறை மந்திரி வந்தார், பார்த்தார். தொழிற் பூங்கா அமைக்க தலையசைத்தார். தற்போதைய தொழில் அமைச்சரும் பார்த்தார். இவரும் அவரைப் போலவே சொல்லி விட்டுச் சென்றார்.
அசெம்பிளியிலும் உறுதி அளித்தார்கள். இப்படி பேச்சு பேச்சாக இருக்கிறது. காலி நிலத்தை பார்வையிட சளைக்காமல் ஆபீசர்களும் டூர் வந்து போகின்றனர்.
மாநில அரசு, பிப்ரவரி 19ல் பட்ஜெட் தாக்கல் செய்ய போறாங்க. அந்த பட்ஜெட்டில் தொழில் பூங்காவுக்கு என்ன ஒதுக்க போறாங்கன்னு கோல்டு சிட்டிக்காரர்கள் எதிர்நோக்கி இருக்காங்க.