பெங்களூரு-பெங்களூரில் தெருநாய்களை போல பூனைகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. எனவே, 'பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து, அதன் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என, மாநகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெங்களூரு பகுதிகளில், இத்தனை நாட்கள் தெருநாய்கள் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக, பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.
தற்போது பூனைகள் தொல்லை அதிகரித்து இருப்பதாக புதிய புகார் எழுந்துள்ளது. எனவே, நாய்களை போலவே பூனைகளை பிடித்து கருத்தடை செய்யுமாறு பொதுமக்கள் கூறுகின்றனர்.
பெங்களூரு வார்டு எண் 5ல் உள்ள கோர்ட் காலனியில், சில நாட்களாக பூனைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிறியது முதல் பெரியது வரை ஏராளமான பூனைகள் காலனி முழுக்க நடமாடி, இங்குள்ள மக்களுக்கு தொல்லை தருவதாக மாநகராட்சியில் புகார் அளித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள வீட்டில் யாரோ ஒருவர் தன்னுடைய வளர்ப்பு பூனைகளை விட்டு சென்றுள்ளார்.
பூனை ஆறு மாதத்துக்கு ஒரு முறை குட்டி போடும் தன்மை கொண்டது. இதனால், இன்று 100க்கும் மேற்பட்ட பூனை கூட்டம் உருவாகி உள்ளது. இது, இப்பகுதி மக்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
சில நேரங்களில் ஜன்னல் வழியே பதுங்கி வரும் பூனைகள், தன் குட்டிகளை படுக்கைக்கு அடியில் விட்டு செல்கின்றன. விரட்ட முயற்சிக்கும்போது சில பூனைகள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகின்றன.
'இந்த பகுதியில், பூனைகளின் எண்ணிக்கையை குறைக்க அதற்கு கருத்தடை செய்ய வேண்டும்' என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகார்களை அடுத்து, பெங்களூரு மாநகராட்சி இந்த பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி உள்ளது.