பசவனகுடி-பிரபல தனியார் கல்லுாரியின் கழிப்பறைக்குள் நுழைந்த மர்ம நபர், மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பசவனகுடியில் பிரபல தனியார் கல்லுாரியில் மாணவி ஒருவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார். இதே வேளையில், ஒரு வாலிபர் உள்ளே புகுந்துள்ளார். மாணவியிடம் தவறாக நடக்க முற்சித்துள்ளார். மாணவி சத்தமாக கூச்சலிட்டதால், கழிப்பறையை வெளியில் இருந்து பூட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.
சத்தத்தை கேட்ட சக மாணவியர் ஓடி வந்து, கதவை திறந்துள்ளனர். சம்பவத்தை கண்டித்து, மாணவியர் கல்லுாரி முன் போராட்டம் நடத்தினர்.
'வெளியில் இருந்து ஒரு நபர் கல்லுாரிக்குள் நுழைந்து, மாணவியர் கழிப்பறை வரை சென்றுள்ளார். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, கோஷமிட்டனர்.
கல்லுாரி நிர்வாகத்தினர், ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார், கல்லுாரி சுற்று வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்கின்றனர்.