தட்சிண கன்னடா-மங்களூரில் கஞ்சா கடத்தி, விற்பனை செய்ததாக 3 டாக்டர்கள், 4 மருத்துவ மாணவியர் மற்றும் 2 மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், தமிழகத்தின், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் அடக்கம்.
மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று கூறியதாவது:
போலீசாருக்கு வந்த புகாரின்படி, கடந்த 8ம் தேதி, மங்களூரு பன்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்த நீல் கிஷோர்லால் ராம்ஜி, 38, என்பவரை கைது செய்தோம். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், என்.ஆர்.ஐ., 'கோட்டா'வில் இங்கு பல் மருத்துவம் படிக்க வந்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக பல் மருத்துவம் படித்தும், இன்னும் படிப்பை முடிக்கவில்லை. இதனால், பணம் சம்பாதிக்க கஞ்சா வியாபாரியாக மாறியுள்ளார். மருத்துவக் கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் டாக்டர்கள் உதவியுடன் கஞ்சா கடத்தி, விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதன் அடிப்படையில், மங்களூரில் வீடுகள், 'ஹாஸ்டல்'களில் தங்கியிருந்த மருத்துவ மாணவியரான கேரளாவைச் சேர்ந்த நதியா சிராஜ், 24, ஆந்திராவின் வர்ஷினி பிரதி, 26, சண்டிகரின் ரியா சதா, 22, புனேயைச் சேர்ந்த ஹீரா பாசின், 23 ஆகிய நான்கு மாணவியர்.
மாணவர்களான பஞ்சாப்பின் பானு தாஹியா, 27, மஹாராஷ்டிராவின் குஷிதிஜ் குப்தா, 25, டாக்டர்களான கேரளாவின் சமீர், 32, தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமாறன் முத்து, 28, பன்ட்வாலின் முகமது ரகுப் குவாஸ், 34, ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீல் கிஷோர்லால் ராம்ஜியும், முகமது ரகுப் குவாசும் இணைந்து, மங்களூரில் பிரசித்தி பெற்ற மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்துள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர் - மாணவியர் உடந்தையாக இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், கேரளாவை சேர்ந்த நதியா சிராஜ், ஆந்திராவின் வர்ஷினி பிரதி ஆகியோர் எம்.பி.பி.எஸ்., முடித்து பயிற்சி மருத்துவராகவும், சண்டிகரின் ரியா சதா, பி.டி.எஸ்., 4வது ஆண்டும், ஹீரா பாசின், எம்.பி.பி.எஸ்., 4ம் ஆண்டும் படித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும், கே.எம்.சி., மருத்துவ கல்லுாரியைச் சேர்ந்தவர்கள்.
பஞ்சாப்பின் பானு தாஹியா, எனபோயா மருத்துவக் கல்லுாரி எம்.டி., இறுதியாண்டு மாணவர், குஷிதிஜ் குப்தா, கே.எம்.சி., மருத்துவ கல்லுாரி எம்.எஸ்., இறுதியாண்டு மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
கேரள டாக்டர் சமீர் மருத்துவ அதிகாரியாகவும், தமிழகத்தின் மணிமாறன் முத்து அறுவை சிகிச்சை நிபுணர், முகமது ரகுப் குவாஸ் டாக்டராகவும் உள்ளனர்.
கஞ்சா கடத்தல், விற்பனை குறித்து கூடுதல் விபரங்கள் அறிய, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர், நடைபாதை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர்.
இவர்கள், பார்ட்டியின் போது கஞ்சா மட்டுமின்றி, எம்.டி.எம்.ஏ., உட்பட மற்ற போதை பொருட்களையும் உட்கொண்டுள்ளனர். இவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா, 78 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மொபைல் போன்கள், பொம்மை துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இரண்டு நாள் போலீஸ் 'கஸ்டடி'யில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
மங்களூரில் கடந்தாண்டு நடந்த 'குக்கர்' குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, பி.ஜி.,க்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. யார் மீதாவது சந்தேகம் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளதால், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.