காரியாபட்டி- -கண்மாய் நிரம்பி குரண்டி- -மாங்குளம் ரோடு நீரில் மூழ்கியதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
காரியாபட்டி குரண்டியிலிருந்து- மாங்குளத்திற்கு 3 கி. மீ., தூரம் உள்ள ரோடு மண் ரோடாக இருந்தது. மழை நேரங்களில் வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. மதுரை- -தூத்துக்குடி நான்கு வழிச்சாலைக்கு எளிதில் வந்து செல்ல இந்த ரோடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனை சீரமைத்து, தார் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ரோடு சீரமைக்க டெண்டர் விடப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. கண்மாயின் குறுக்கே ரோடு செல்வதால் மழை காலங்களில் கண்மாய் நிரம்பி நீரில் மூழ்காமல் இருக்க பாலம் அமைக்கப்பட்டது, சரியான திட்டமிடல் இல்லாமல் பாலம் அமைக்கப்பட்டதால் மறுபக்கம் தண்ணீர் செல்ல வழிஇல்லை.
இந்நிலையில் தற்போது வைகை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டு அப்பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. குரண்டி கண்மாயும் நிரம்பியதால் குரண்டி- - மாங்குளம் செல்லும் ரோடு நீரில் மூழ்கியது. வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. விளைப் பொருட்களை வாகனங்களில் ஏற்றி செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சில மாதங்களுக்கு முன் ரோடு பணிகளுக்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் நீரில் மூழ்கின. இதனால் அரசு நிதி பல லட்ச ரூபாய் வீணாகியது. அறியாமல் இந்த வழித்தடத்தில் வரும் வாகனங்கள் சகதியில் மாட்டிக் கொள்கின்றன.
கண்மாய் நீர் நிரம்பி பாலம் வழியாக மறுபக்கம் செல்லும் வகையில் பாலம் அமைத்து, நீரில் மூழ்காத வகையில் ரோட்டை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.