கோவை : பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில், லேப்டாப் எப்போது கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை, 2011ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இத்திட்டம், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்விக்கு, பேருதவியாக இருந்தது.
உயர்கல்விக்கு பெரிதும் கைகொடுத்த இத்திட்டம், 2020ம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு பின், இரு கல்வியாண்டுகளாக, லேப்டாப் வழங்குவதற்கு டெண்டர் அறிவிப்பு கூட, வெளியிடாமல் இழுத்தடிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' வழங்குவதாக குறிப்பிட்டது. ஆனால், அமைச்சர் மகேஷ், டேப் எளிதில் உடைந்துவிடும் என்பதால், மீண்டும் லேப்டாப் வழங்குவதற்கான ஆலோசனைகள் நடப்பதாக தெரிவித்தார்.
இக்கல்வியாண்டின் இறுதிப்பருவம் துவங்கியும், லேப்டாப் பயனாளிகள் குறித்த, கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. எங்களுக்கு எப்போ லேப்டாப் கிடைக்கும் என, முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து, பள்ளியை அணுகுவதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில், லேப்டாப் வழங்குவது குறித்த, எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், இழுத்தடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. இத்திட்டம், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொள்ள, பெரிதும் கைகொடுக்கிறது' என்றனர்.