தளவாய்புரம்--நாய் தொல்லை, குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. போதிய குடிநீர் கிடைப்பதில் சிரமம், பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் போன்ற பிரச்னைகளால் செட்டியார்பட்டி பேரூராட்சி 5வது வார்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
செட்டியார்பட்டி 5வது வார்டில் நாடார் நடு மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, மங்கம்மாள் சாலை கீழ்புறம் ஆகிய தெருக்கள் உள்ளது.
பேவர் பிளாக், சிமெண்ட் ரோடு, சாக்கடை வசதி உள்ள நிலையில் பிள்ளையார் கோயில் தெரு குறுக்கு தெருக்களில் சாக்கடை போதிய அளவு அகலமாக அமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் கழிவு நீர் தெருக்களில் மோதும் நிலை உள்ளது. இதனால் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.
நாடார் நடு மாரியம்மன் கோயில் தெரு நடுவே போர்வெல் குழாய்க்கு மூடியை தகரத்தில் அமைத்துள்ளதால் வாகனங்கள் செல்லும்போது மேல் எழும்பி தடுமாறும் நிலை உள்ளது. அதன் மேல் கல்லை வைத்து சமாளிக்கின்றனர்.
இப்பகுதி சுகாதார வளாகம் இரண்டு வாரமாக பூட்டப்பட்டுள்ளதால் திறந்தவெளியை நாடி வருகின்றனர்.