பொங்கலுார் : பொங்கலூர் உகாயனுாரில் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. பொங்கலுார் வேளாண் உதவி இயக்குனர் பொம்முராஜு வரவேற்றார்.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில், ''சிறுதானியங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். செரிமானத்தை அதிகரிக்கும். கோடை உழவு செய்வதால் பூச்சி தாக்குதல் குறையும். கோ - 32 ரக சோளம் விதை மற்றும் தட்டு மகசூலை அதிகம் தரும்.விதை மற்றும் வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த 'சூடோமோனாஸ்' விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது,'' என்றார்.