பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியில், விளையாட்டு மைதானம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் பிரியங்காவிடம், பா.ஜ., நகர தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி மகாலிங்கபுரம், 11வது வார்டு தாகூர் வீதியில் வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர் டோக்கன் வழங்காமல், தி.மு.க., கட்சி அலுவலகத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. தவறு செய்த ஊழியர்களையும், அரசு ஊழியர் அல்லதாவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரோடுகள் மோசமாக உள்ளன. குண்டும், குழியுமான ரோட்டில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை. ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
நகரப்பகுதிகளில் நெரிசலை தவிர்க்க காலை, 7:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகளை வேகப்படுத்தி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 'ரிங் ரோடு' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தடகள சங்கம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சியில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாநில, தேசிய அளவில் நடைபெறும் எந்த விளையாட்டானாலும், பொள்ளாச்சி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்ப்பது வழக்கம்.
கடந்த, எட்டு ஆண்டுகளாக பொள்ளாச்சி மாணவர்களின் விளையாட்டு திறன் வெளிப்படுவதில்லை. கடந்த, 2014ம் ஆண்டு வரை, 80 சதவீத மாணவர்கள் மாவட்ட அளவில் விளையாட்டில் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த, 2015ம் ஆண்டுக்கு பின், 40 சதவீத மாணவர்கள் மட்டுமே விளையாட்டில் பங்கேற்கின்றனர். மாவட்ட போட்டிகளில், 20 சதவீதமே தேர்ச்சி பெறுகின்றனர். தேசிய போட்டிக்கு தேர்ச்சியாவதில்லை.
இதற்கு, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மைதானம் இல்லாததே காரணம். இருக்கும் மைதானத்தை கட்டடங்களாக மாற்றியுள்ளனர். எனவே, உடனடியாக அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.