விருதுநகர்---சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, நீர் வரத்து கால்வாய் அடைப்பு, துார் வாராத நீர் வரத்து ஓடை போன்ற பிரச்சனைகளால் பாழாகி வரும் பட்டம்புதுார் கண்மாயில் நீரை தேக்க முடியாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்னர்.
பட்டம்புதூர் கண்மாய் 35 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. 150 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கண்மாயில் 7 மடைகள் உள்ளன. இங்கு நிரம்பும் தண்ணீர் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். 700 ஏக்கருக்கு மேல் பாசன வசதி தரும் இந்த கண்மாய் முழுவதும் சீமை கருவேல முட்செடிகள் வளர்ந்து காடாக உள்ளன.
குல்லூர்சந்தை அணையில் தண்ணீர் திறந்தால் கூட பாசன கால்வாய் பாதை அடைப்பால் கண்மாய்க்கு தண்ணீர் வராது. கண்மாய் கரையை உயர்த்தி பணியை தரமானதாக செய்யாததால் கரைஉறுதி இழந்து விட்டது. பராமரிப்பு செய்யாமல் விட்டதாலும், மழைநீர் வரும் மெயின் ஓடையை தூர்வாராமல் விட்டதாலும் கண்மாயில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.
கண்மாய் வறண்டு போனதால், விவசாயம், நிலத்தடி நீர் அனைத்தும் கேள்விக் குறியாகி விட்டது. தற்போது கண்மாயில் குப்பையும், கழிவு நீரும் தான் உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி முழு அளவில் கண்மாயில் தண்ணீரை தேக்குவதன் மூலம் இங்கு இருபோகம் நெல், பருத்தி, கம்பு, சோளம், பாசிப் பயறு, உளுந்தம் பயறு, வெள்ளரிக்காய், கத்தரிக் காய் உள்ளிட்டவற்றை இப்பகுதி விவசாயிகள் விளைவிக்க ஏதுவாகும்.