உடுமலை : திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், சர்தார் வீதி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்து தரப்படும்,' என பேசினார். நகராட்சி தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன் முன்னிலை வகித்தனர். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆசிரியர் கோபிநாத் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். ஒருங்கிணைப்பாளர்கள் செல்லதுரை, சண்முகசுந்தரம், விஜயகுமார், ஸ்ரீரங்கராயன் உள்ளிட்டோர் பேசினர்.
நேற்றைய பயிற்சி வகுப்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற, 21 மாணவர்கள் பங்கேற்றனர். வரும், 13ம் தேதி பயிற்சி மையத்தில் இம்மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
வாரம்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் காலை 10.30மணி முதல் 12.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பயிற்சி தேர்வு நடைபெறும். மாணவர்கள் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.