கீழக்கரை--காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாதையின் வழியாக கொட்டகுடி ஆறு முகத்துவாரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி நபர்கள் பாதை தராமல் ஆக்கிரமித்து அடைத்து வைத்திருந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை வருவாய்த்துறையினருக்கு மனுக்கள் அளித்து வந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற காஞ்சிரங்குடிம் ஊராட்சி தலைவர் முனியசாமி ஆக்கிரமிப்பு செய்த தனி நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு கண்டார். அதன் அடிப்படையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தடுப்புச் சுவர் அகற்றப்பட்டது. 33 அடி அகலத்தில் 1 கி.மீ., நீளம் கொண்ட இப்பாதையில் தற்போது சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
ஊராட்சி தலைவர் முனியசாமி கூறுகையில், கீழக்கரை, காஞ்சிரங்குடி, கோரைக்குட்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார சிறு கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தற்போது அமைக்கப்படும் குறுக்கு பாதையின் வழியாக எளிதில் சேதுக்கரைக்கு சென்று விடலாம். இதனால் கூடுதலாக 6 கி.மீ., சுற்றும் பயண நேரம் மிச்சமாகி உள்ளது, என்றார்.
மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் உட்பட பலர் உடன் இருந்தனர்.