தொண்டாமுத்தூர் : ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதியில், 'விசா' இன்றி வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளார்களா என்பது குறித்து, போலீசார் வீடு வீடாக சென்று சோதனை செய்தனர்.
பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் வட்டாரப்பகுதிகளில், வெளிநாட்டவர் விசா இன்றி, சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பூலுவபட்டி, சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், ஆலாந்துறை, முகாசிமங்கலம், காளிமங்கலம், நாதேகவுண்டன்புதூர், இக்கரை போளுவாம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், பூண்டி, முள்ளங்காடு, முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுபள்ளம், நல்லூர்வயல், கல்கொத்திபதி சீங்கப்பதி, சாடிவயல் உள்ளிட்ட, 33 கிராமங்களில் போலீசார் வீடு வீடாக சென்று, வெளிநாட்டவர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா, அவர்களுக்கு 'விசா' உள்ளதா அல்லது காலாவதி ஆகிவிட்டதா என்பது குறித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், கோவை மாவட்ட குற்றப்பதிவு டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் தலைமையில், 40 பேர் கொண்ட, 8 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவினர், வீடு வீடாக சென்று, அப்பகுதி மக்களிடம் வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளார்களா என விசாரித்தனர்.