பல்லடம், : 'வாய்க்கால் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை,' என, பல்லடம் அருகே, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பி.ஏ.பி., திட்டத்தின் மூலம், பல்லடம் வட்டாரத்தில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. வாய்க்கால், மற்றும் அதை சுற்றியுள்ள வழித்தட ஆக்கிரமிப்பு பிரச்னைகள், பரவலாக எழுந்து வருகின்றன.
அவ்வாறு, பல்லடம் நாரணாபுரம் கிளை வாய்க்காலுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
நாரணாபுரம் கிளை வாய்க்காலுக்கு இடையே, பி.ஏ.பி., அனுமதி பெற்று தனியார் மூலம் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை ஒட்டியுள்ள வழித்தடம், விவசாயிகள் பலருக்கும் பயன்பட்டு வருகிறது. தற்போது இந்த வழித்தடத்தை அடைத்து, தனியார் மூலம் இரும்பு கேட் போடப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கென பிரத்யேகமாக பாலம் அமைக்க அனுமதி வேண்டும் என்று கேட்டாலும், பொதுப்பணித் துறையினர் அனுமதி வழங்க மறுக்கின்றனர்.
இதனால், வழித்தடம் மூடப்பட்டு விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரும்பு கேட்டை அகற்றி வழித்தடத்தை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.