உடுமலை,: கேரளாவில் அன்னாசி உற்பத்தி அதிகரித்துள்ளதால், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பழங்கள் அதிகளவு குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில், அன்னாசி உற்பத்தி அதிகளவு உள்ளது. அங்குள்ள வாழக்குளம் சுற்றுப்பகுதியில் மட்டும், பல ஆயிரம் ஏக்கரில், இவ்வகை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில், விளையும் 'கன்னராசக்கா' என்ற ரகத்துக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
எனவே இந்த ரகம், வாழக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிற ரக அன்னாசியும் அப்பகுதியில் பரவலாக உற்பத்தியாகிறது.
நடப்பாண்டு உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால், விலை சரிவை தவிர்க்க, தமிழக - கேரள எல்லை பகுதியில், அன்னாசி பழங்களை கொண்டு வந்து குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வகையில், உடுமலை பகுதிக்கு மூணாறு வழியாக அன்னாசி கொண்டு வரப்பட்டு, தரத்தின் அடிப்படையில், பழம், 30 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் 5 லோடு அளவுக்கு அன்னாசி கொண்டு வரப்படுகிறது.
பொங்கல் சீசனையொட்டி இப்பகுதியில், அன்னாசி பழம் விற்பனை அதிகளவு இருக்கும்; எனவே அதை திட்டமிட்டு, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என, வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.