உடுமலை : ஊரக பகுதி பெண் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பத்தினர்கள் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே மேற்கொண்டுவரும் தொழிலை மேம்படுத்தவும், திட்ட மதிப்பீட்டில், 30 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் முதல் ஆண்டுக்கான நிதியுதவியுடன், இந்த திட்டத்தில் இணைந்த வங்கிகள் வாயிலாக, கடனுதவியும் வழங்கப்படுகிறது.
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், மத்திய அரசின் பி.எம்.எப்.எம்.இ., திட்டம் வாயிலாக, விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்ற தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு, திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ திட்டங்களில் மானியத்துடன் வங்கி கடன் பெறுவது குறித்த சிறப்பு முகாம், திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.
வரும் 19ம் தேதி பொங்கலுார்; 20ம் தேதி குண்டடம்; 21ம் தேதி திருப்பூர்; 24ம் தேதி அவிநாசி; 25ம் தேதி உடுமலை ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நிரந்தர குடியிருப்பு ஆவணம் உள்ள பெண்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கவேண்டும்.