சிவகங்கை--''நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலமே தொழில்களும் வளர்ந்து வருகின்றன,'' என வணிக ஆசிரியர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
சிவகங்கையில், கல்வித்துறை, பத்மராஜம் கல்வி குழுமம், சார்ட்டர்டு அக்கவுண்ட் அசோசியேஷன் இணைந்து வணிகவியல், பொருளியல் ஆசிரியர்களுக்கு சி.ஏ., படிப்பதின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்வி குழும நிர்வாகி அக்பர் பாட்சா வரவேற்றார்.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது, சி.ஏ., படிப்பு என்றால் சிக்கலானது என நினைக்கிறார்கள். எந்த படிப்பு தேவை என்பதை உணர்ந்தால் சி.ஏ.,படிப்பு கூட எளிமை தான். பிளஸ் 2 வில் வணிகவியல், கணக்குபதிவியல் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ., படிப்பு சற்று எளிமை தான்.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருவதற்கேற்ப தொழில்கள் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
தொழில்களை திறம்பட செயல்படுத்த சிறந்த படிப்பு சி.ஏ., மட்டுமே. மாணவர்களுக்கு இப்படிப்பின் அவசியம், முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
80 சதவீதத்திற்கு மேல் அவசியம்
முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது, மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்துள்ளோம். அவர்கள் உயர்கல்வி படிப்பிற்கான ஆலோசனைகளை வழங்குவர்.
இம்மாவட்ட பள்ளிகளில் வணிகவியல், கணக்கு பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் உள்ளனர். அவர்களை கண்டறிந்து சி.ஏ.,வில் சேர்வதற்கான ஆலோசனை தர வேண்டும். அரசு பொதுதேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. எனவே ஆசிரியர்கள் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தி ஒவ்வொரு பாடத்திலும் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற செய்ய வேண்டும், என்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) விஜயசரவணக்குமார், கல்வி குழும தலைவர் பாலன், சாட்டர்டு அக்கவுண்ட் சிறப்பு நிபுணர்கள் தவமணி, அசோசியேஷன் தென்னிந்திய தலைவர் சரவணக்குமார், பிசினஸ் ரிலேஷன்சிப் மேலாளர் ராய்ஸ்டன் எபினேசர் பங்கேற்றனர். புலவர் சங்கரலிங்கனார் நன்றி கூறினார்.