கிணத்துக்கடவு, : தாமரைக்குளம் அருகே, ரோட்டோரத்தில் தேங்கியுள்ள குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கிணத்துக்கடவு அருகே, தாமரைக்குளம் - நல்லட்டிப்பாளையம் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோட்டில், ரயில்வே கேட் அருகே ரோட்டோரத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. முறையாக அப்புறப்படுத்தாமல் பல மாதங்களாக குப்பை தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது.
இப்பகுதியில் குடியிருப்போர், கடை வைத்துள்ளவர்கள், அவ்வழியாக பள்ளி, கல்லுாரி செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். அவ்வப்போது குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகையால், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இது குறித்து, பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: கிராமத்தின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டியது, ஊராட்சி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். ஆனால், குப்பையையும் அகற்றாமல், குவிந்திருக்கும் குப்பைக்கு தீயும் வைப்பதால், ஒட்டுமொத்த சுகாதாரமும் பாதிக்கிறது.
கிராமத்தின் சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.