கோவை, : தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது; கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு, உதவி இயக்குனர் (பேரூராட்சி) துவாகரநாத்சிங் உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக, கலெக்டர் சமீரன் கூறியதாவது:
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பங்கேற்கும் வகையில், 42 வகையான மாவட்ட அளவிலான போட்டிகள், 8 வகையான மண்டல அளவிலான போட்டிகள் என, 50 வகையான போட்டிகள் நடத்தப்படும்.
கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, நீச்சல், வாலிபால், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள், 15-35 வயது, பள்ளி மாணவ, மாணவியர் - 12-19 வயது, கல்லுாரி மாணவ, மாணவியர் - 17-25 வயது வரையிலானவர்கள் பங்கேற்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள், 17ம் தேதிக்குள், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.