திருப்பூர், : 'வாகனத்தை இயக்கும் போது, மொபைல்போன் பயன்படுத்துவதால், கவனக்குறைவு ஏற்பட்டு, விபத்து நேரிடுகிறது. பயணத்தில் மொபைல்போன் பயன்பாட்டை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும்,' என, வடக்கு ஆர்.டி.ஓ., ஜெயதேவ்ராஜ் அறிவுரை வழங்கினார்.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவர்கள் சார்பில், சிறுபூலுவப்பட்டி, வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
'சீட் பெல்ட்' அவசியம்
வடக்கு ஆர்.டி.ஓ., ஜெயதேவ்ராஜ் பேசியதாவது:டூவீலர் இயக்குபவர் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும்; இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். லைசன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்க கூடாது; 18 வயதுக்கும் குறைவானவர், சிறுவர், சிறுமியருக்கு பெற்றோர் டூவீலர் வாங்கித்தர கூடாது. 18 வயது பூர்த்தியான பின், லைசன்ஸ் பெற்று, வாகனத்தை இயக்கலாம்.வாகனங்களில் சைலன்சரை மாற்றி அமைக்க கூடாது; ெஹல்மெட்டில் கேமரா பொருத்த கூடாது. கார், கனரக வாகன ஓட்டுபவர் சீட்பெல்ட் அணிவது கட்டாயம். வாகனத்தை இயக்கும் போது, மொபைல் போன் பயன்படுத்துவதால், கவனக்குறைவு ஏற்பட்டு, விபத்து நேரிடுகிறது. வாகனம் இயக்கும் போது மொபைல் போன் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. டிரைவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக எமதர்மராஜா வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.